Sunday, January 1, 2017

பழந்தமிழ் எழுத்து மற்றும் தமிழ் மொழி எழுத்து உருவான வரலாறு


தமிழ் மொழி (Tamil language) தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயுனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ், ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும்.திராவிடமொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் மேலும் கவனமாகப் பழைய அமைப்புகளைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.

வரலாறு
தமிழ் இந்திய மொழிகளில் மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும். இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 1,00,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 55,000 க்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதிபண்ணுவது மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழிவழியாக பாதுகாக்கப்பட்டு வந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட் சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும் கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கிமு 200 ஆம் ஆண்டு காலத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005-ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கிமு 500 ஆம் ஆண்டிற்கும் முன் தள்ளியுள்ளன.[8] பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம், கி.பி 200 - 300 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும்.


தமிழறிஞர்களும் மொழியலாளர்களும் தமிழ் இலக்கியத்தினதும் தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை:

    சங்க காலம் (கிமு 300 - கிபி 300)    சங்கம் மருவிய காலம் (கிபி 300 - கிபி 700)    பக்தி இலக்கிய காலம் (கிபி 700 - கிபி 1200)    மையக் காலம் (கிபி 1200 - கிபி 1800)    தற்காலம் (கிபி 1800 - இன்று வரை)

பக்தி இலக்கிய காலத்திலும், மையக் காலத்திலும் பெருமளவு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன. பிற்காலத்தில் பரிதிமாற் கலைஞர், மறைமலை அடிகள் முதலான தூய்மைவாதிகள் இவை தமிழிலிருந்து நீக்கப்பட உழைத்தனர். இவ்வியக்கம் தனித்தமிழ் இயக்கம் என அழைக்கப்பட்டது. இதன் விளைவாக முறையான ஆவணங்களிலும், மேடைப் பேச்சுகளிலும், அறிவியல் எழுத்துக்களிலும் வடமொழிக் கலப்பில்லாத தமிழ் பயன்பட வழியேற்பட்டது. கி.பி 800 க்கும் 1000 க்கும் இடைப்பட காலப்பகுதியில், மலையாளம் ஒரு தனி மொழியாக உருவானதாக நம்பப்படுகின்றது.

மொழிக்குடும்பம்

தமிழ், தமிழ் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். இக் குடும்பத்தில், இருளா, கைக்காடி, பெட்டக் குறும்பா, சோலகா மற்றும் யெருகுலா என்னும் மொழிகள் அடங்கும். தமிழ்


தமிழ்-மலையாளம் மொழிகள்: தமிழ்- மலையாளம் மொழிகளின் ஒரு துணைக் குடும்பமாகும்.
தமிழ்-குடகு மொழிகள்: தமிழ்- குடகு மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும்.
தமிழ்-கன்னடம் மொழிகள்: தமிழ்- கன்னடம் மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும் உள்ளன.
திராவிட மொழிக் குடும்பம்: திராவிட மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவுகளுள் ஒன்றான தென் திராவிட மொழிக் குடும்பத்தின் உட் பிரிவுகளுள் ஒன்றாகும்.


தமிழ் நாட்டை எல்லையாகக் கொண்டுள்ள, கேரள மாநில மக்களால் பேசப்படும் மலையாளம், சொற்கள், வசன அமைப்பு ஆகிய அம்சங்களில் தமிழை நெருக்கமாக ஒத்துள்ள ஒரு மொழியாகும். ஏறத்தாழ ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழும், மலையாளமும் ஒரே மொழியின் இரு வட்டார வழக்குகளாகவே இருந்து வந்தன. இரு பகுதியினருமே இம் மொழியினைத் தமிழ் எனவே வழங்கிவந்துள்ளனர். மலையாளத்துக்கும், தமிழுக்கும் இடையிலான வேறுபாடுகள் சில, வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டே கிழக்குத் தமிழ் வழக்கிற்கும், மேற்குத் தமிழ் வழக்கிற்குமிடையே பிரிவு ஏற்படத் தொடங்கியதைக் காட்டுவதாக அமைகின்ற போதும், தெளிவாக இரண்டு தனி மொழிகளாகப் பிரிந்தது 13 ஆம் 14 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியிலேயே ஆகும்.

தமிழில் பெயர்க்கப்பட்டு 1723இல் தரங்கம்பாடியில் அச்சிடப்பட்ட விவிலியத்தின் முதல் நூலாகிய தொடக்க நூலின் முதல் அதிகாரம்
 


பதினைந்தாம் நூற்றாண்டிலோ பதினாறாம் நூற்றாண்டிலோ எழுதப்பட்ட கிறித்தவ சமய வழிபாட்டு ஓலைச் சுவடிகள் 

எழுத்துமுறை

எழுத்துரு மாற்ற வரலாறு

தமிழ் எழுத்து முறைமை ஒலிப்பியல் அடிப்படையிலானது; குறுக்கம், அளபெடை, மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துக்கள் ஒலிக்கப்படுகின்றன. தற்போதைய தமிழ் எழுத்துமுறை தமிழ் பிராமியில் இருந்து தோன்றியது ஆகும். தமிழ் பிராமி காலப்போக்கில் வட்டெழுத்தாக உருமாறியது. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் "வட்டெழுத்து" முறை உருவானது. ஓலைச்சுவடிகளிலும், கல்லிலும் செதுக்குவதற்கேற்ப இருந்தது.

வட்டெழுத்தில் சமஸ்கிருத ஒலிகள் குறிக்கப்பட முடியாது என்பதால் சமஸ்கிருத ஒலிகளை எழுதும் பொருட்டு சில கிரந்த எழுத்துமுறை கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தினர். இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்துவதற்கு மாறாக தொல்காப்பியம் கூறியபடி அச்சொற்களைத் தமிழ்படுத்த வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

பின்னர், வீரமாமுனிவரின் அறிவுரைப்படி இரட்டைக் கொம்பு போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டன. 1977 எம். ஜி. இராமச்சந்திரன் ஆட்சியில் அச்சில் ஏற்றுவதை எளிமைப்படுத்தும் வகையில் பெரியாரால் பரிந்துரைக்கப்பட்ட ஆகார மற்றும் ஐகார உயிர்மெய் எழுத்துக்களில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. எனினும் பெரியாரது உகர சீர்திருத்தம் செயல்படுத்தப்படவில்லை.
 

தமிழில் பெயர்க்கப்பட்டு 1715 இல் தரங்கம்பாடியில் அச்சிடப்பட்ட விவிலியத்தின் முதல் நூலாகிய தொடக்க நூலின் முதல் பக்கம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1968 விழா மலரில் 

Share:

1 comment:

  1. பதிவுக்கு நன்றி..
    அன்புடையீர்!,
    இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
    #தமிங்கிலம்தவிர்
    #தமிழெழுதிநிமிர்
    #வாழ்க #தமிழ்
    இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
    ÷÷ மபபமய

    ReplyDelete