இனியவை நாற்பது
- பூதஞ்சேந்தனார் என்பவர் இயற்றிய நூல் இனியவை நாற்பது.
- இது நாற்பது வெண்பாக்களினால் ஆனது. பண்டைக்காலத் தமிழ்நூல் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று.
- உலகில் நல்ல அல்லது இனிமையான விடயங்களை எடுத்துக்கூறுவதன் மூலம் மக்களுக்கு நீதி புகட்டுவதே இந்நூலின் நோக்கம்.
- ஒவ்வொரு பாடலும் மூன்று நல்ல விடயங்களை எடுத்துக் கூறுகின்றது.
எடுத்துக்காட்டு
- சுற்றியிருப்பவர்களுக்குக் கல்வி கற்பித்தல் மிகவும் நல்லது;
- கற்றறிந்த பெரியோர்களைத் துணை கொண்டு வாழ்தலும் மிக நன்று;
- சிறிய அளவிலாயினும் தேவைப்படுபவர்களுக்குக் கேட்காமலேயே கொடுப்பது எப்பொழுதுமே நல்லது என்னும் பொருள்படும் இந்நூற் பாடலொன்று பின்வருமாறு:
- சுற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே
- மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே
- எள்துணை யானும் இரவாது தான்ஈதல்
- எத்துணையும் ஆற்ற இனிது.
- இது போல் இந்நூலில் 124 இனிய சொற்கள் கூறப்படுகின்றன.
- இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நான்கு நாற்பது பாடல்களைக் கொண்ட நூல்களில் இரண்டாவதாகும்.
- இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் எனப்படுவர்.
- இவர் தந்தையார் மதுரைத் தமிழாசிரியர் பூதன். இவர் வாழ்ந்த நாடு பாண்டி நாடு. இவர் சிவன், திருமால், பிரமன் முதலிய மூவரையும் பாடியுள்ளார். ஆதலால் இவரின் சமயம் வைதீகமாகும்.
- இவர் சர்வ சமய நோக்குடையவராயிருந்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.
- இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 செய்யுட்களைக் கொண்டது.
- இவற்றுள், 'ஊரும் கலிமா' எனத் தொடங்கும் பாடல் ஒன்று மட்டுமே (8) பஃறொடை வெண்பா. ஏனைய அனைத்தும் இன்னிசை வெண் பாவினால் ஆக்கப்பட்டுள்ளது.
- இந்நூலில் நான்கு இனிய பொருள்களை எடுத்துக் கூறும் பாடல்கள், நான்கே நான்கு தான் உள்ளன(1, 3, 4, 5). எஞ்சிய எல்லாம் மும்மூன்று இனிய பொருள்களையே சுட்டியுள்ளன; இவற்றில் எல்லாம் முன் இரண்டு அடிகளில் இரு பொருள்களும், பின் இரண்டு அடிகளில் ஒரு பொருளுமாக அமைந்துள்ளமை கவனிக்கத் தக்கது.
- வாழ்க்கையில் நன்மை தரும் கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து 'இனிது' என்ற தலைப்பிட்டு அமைத்திருப்பதால் இஃது 'இனியவை நாற்பது' எனப்பட்டது. இதனை 'இனிது நாற்பது', 'இனியது நாற்பது', 'இனிய நாற்பது' என்றும் உரைப்பர்.
- இவர் பிரமனைத் துதித்திருப்பதால் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்குப் பிந்தியவர் என்பதோடு, இன்னா நாற்பதின் பல கருத்துக்களை அப்படியே எடுத்தாளுவதால் இவர் அவருக்கும் பிந்தியவர் எனலாம். அதனால் இவரது காலம் கி.பி.725-750 எனப்பட்டது.
- நூற்குறிப்பு :
0 comments:
Post a Comment