Wednesday, December 28, 2016

புறநானூறு (எட்டுத்தொகை)

                                        புறநானூறு


  • புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். புறம், புறப்பாட்டு என்றும் வழங்கப்படும்.
  •  இது சங்க காலத் தமிழ் நூல் தொகுப்பான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. 
  • இந்நூலைத் தொகுத்தவர் பெயரும், தொகுப்பித்தவர் பெயரும் தெரியவில்லை.பாக்களின் அடி வரையறை 4 அடி முதல் 40 அடி வரை உள்ளன. 
  • புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன. 
  • இதனை ஜி. யு. போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்

பாடியவர்கள் :
  • இந் நூலில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பல்வேறு காலங்களில் பாடப்பட்டவை. 
  • அகவற்பா வகையைச் சேர்ந்த இப்பாடல்கள், 150-க்கும் மேற்பட்ட புலவர்களால் எழுதப்பட்டவை. இவர்களனைவரும் ஒரே சமூகத்தையோ நாட்டையோ சார்ந்தவர்கள் அல்ல. அரசன் முதல் எளிய குயவன்மகள் வரை பல்வேறு நிலைகளில் இருந்த ஆடவரும் பெண்டிருமான புலவர்கள் பாடியுள்ளனர். புலவர் அரசர்களைப் பாடியதை அவனை அவர் பாடியதுஎன்று சொல்வதன் மூலம் புலவர்களுக்கிருந்த செல்வாக்கும் மதிப்பும் புலனாகிறது.

நூல் அமைப்பு :
  • இந்நூலில் பாடல்கள் தொகுக்கப்படும்போது ஒருவகை இயைபு கருதி, முதலில் முடிமன்னர் மூவர், அடுத்து குறுநில மன்னர்,வேளிர் ஆகியோரைப் பற்றிய பாடல்களும் அடுத்து போர்ப் பற்றிய பாடல்களும், கையறுநிலைப்பாடல், நடுகல், மகளிர் தீப்பாய்தல் என்று தொகுத்துள்ளனர். 
  • புறப்பொருள் கருத்துகளைத் தழுவி பாடப்ப்பட்ட இந்நூலில் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் திணை, துறை, பாடினோர், பாடப்பட்டோர், பாடப்பட்ட சூழல் போன்ற குறிப்புகள் உள்ளன.

புறப்பொருள் :
அகப்பாடல்கள் ஐந்திணை ஒழுக்கங்களைக் குறித்தது போல, புற ஒழுக்கங்களைக் குறித்து அமைந்த பழங்கால வாய்பாட்டுப் பாடல் நமக்கு விளக்குகிறது.
உதாரணம் பாடல் :
வெட்சி நிரைக்கவர்தல் மீட்டல் கரந்தையாம்
வட்கார்மேல் செல்வது வஞ்சியாம் - உட்கா
தெதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
அதுவளைத்த லாகு முழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர்
செருவென் றதுவாகை யாம்.
  • இப்புற ஒழுக்கங்களை வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, என்ற எட்டுத் திணைகளாகக் குறிப்பிடுகின்றன. இதில் பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை ஆகிய திணைகளும் அடங்கும். திணையின் உட்பிரிவு துறை எனப்படுகிறது.
  • புறப்பாடல்கள் புற ஒழுக்கங்களான போர்த்திறம், வள்ளல் தன்மை, மகளிர் மாண்பு, சான்றோர்களின் இயல்பு போன்றவற்றைக் குறிப்பிடுகின்றன.


புறநானூறு வழி அறிய வரும் செய்திகள் :

  • அக்காலத் தமிழ் மக்களின் அரசியல், சமூகம், பொருளாதரம், கல்வி, நாகரிகம், கலை வளர்ச்சி, வீரம், கொடை, ஆடை, அணிகலன் பழக்க வழக்கங்கள், வாணிபம் போன்ற பல செய்திகளை புறநானூறு வழி அறியலாம்.


வரலாற்று குறிப்புகள் :
  • புறநானூற்றுப் பாடல்களில் ஏராளமான வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. பாண்டியன் நெடுஞ்செழியன் முதலான 15 பாண்டிய மன்னர்களையும், கரிகாற்சோழன் போன்ற 18 சோழ அரசர்களையும், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் போன்ற 18 சேர அரசர்களையும் சிறப்பித்துப் பாடியுள்ளனர். பண்டையப் போர்க் களங்களான வெண்ணிப்பறந்தலை, வாகைப்பறந்தலை, கமுமலம், தகடூர், தலையாலங்கனம், கானப்பேரெயில் போன்றவற்றை சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளன.

சமூக நிலை :
  • பெண்கள் மங்கல அணி அணிதல், இறந்தவரைத் தாழியில் கவித்தல், நடுகல் நடுதல், நட்ட கல்லைச் சுற்றி மயிற்பீலி அணிவித்து மது வார்த்தல், கணவனை இழந்த பெண்கள் அணிகளைக் களைந்து, கைம்மை நோன்பு நோற்றல், உடன்கட்டையேறல் போன்ற பழக்க வழக்கங்களையும் 10 வகை ஆடைகளையும், 28 வகை அணிகலன்களையும், 30 படைக்கலக்கருவிகளையும், 67வகை உணவுகளையும் எடுத்து இயம்புகின்றன. 
  • பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைக்கு கையில் வேல் கொடுத்து போருக்கு அனுப்பும் மகளிர், முறத்தால் புலியை விரட்டும் மகளிர் எனப் பெண்களின் வீரத்தையும் போற்றுகின்றன. 
  • அக்கால சமூக நிலையைக் காட்டும் கண்ணாடி என புறநானூறு விளங்குகிறது.





Share:

0 comments:

Post a Comment